ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறோம்;தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து தே.மு.தி.க. போட்டியிடுகிறது என்று கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து தே.மு.தி.க. போட்டியிடுகிறது என்று கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
பணப்பட்டுவாடா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தே.மு.தி.க. தேர்தல் பணிமனை ஈரோடு சம்பத்நகரில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்த் தலைமை தாங்கினார். விழாவில் கட்சியின் மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தேர்தல் பணிமனையை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவா் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் உள்பட அரசு எந்திரமே இங்கு தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்கு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. எனவே பணப்பட்டுவாடாவை தடுக்கவும், மத்திய பாதுகாப்பு படை வர வேண்டியும் தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இதேபோல் பணம் வினியோகம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எதிர்த்து போட்டி
தமிழக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழர்களுக்கு வேலை கொடுத்தால் வட மாநிலத்தவர்கள் எதற்காக இங்கே வரப்போகிறார்கள்? இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது தி.மு.க.வுக்கு புதியது அல்ல. இந்த இடைத்தேர்தலிலும் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். ஆளும் கட்சி அதிகார பலத்தை பயன்படுத்துவதை எதிர்த்து தான் இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.