ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அண்ணாமலை முடிவை பொறுத்தே போட்டி - நயினார் நாகேந்திரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாநில தலைவர் அண்ணாமலை எடுக்கும் முடிவிலேயே போட்டியானது இருக்கும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்ட பாஜகவின் மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக சட்டசபை குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
தமிழகத்தில் பாஜக அபரீதமான வளர்ச்சி அடைந்துள்ளது. அதை நாங்கள் சொல்வதை விட திமுக அமைச்சரே கூறியிருக்கிறார்.ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் மாநில தலைவர் அண்ணாமலை எடுக்கும் முடிவிலேயே போட்டியானது இருக்கும்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நாங்கள் ஏற்கனவே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளோம். வருகிற தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும் போது நிச்சயம் தாமரை சின்னத்தில் இங்கு தேர்தலில் போட்டியிடுவோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது.
இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் முன்பு பள்ளி, மாணவர்கள் பெண்கள் அதிகமாக நிற்பதை காண முடிகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் வந்துள்ளது. இதுகுறித்து நான் பலமுறை சட்டசபையில் கருத்து தெரிவித்துள்ளேன்.
ஆனால் இதுவரை அதற்கு தீர்வு கண்டதாக தெரியவில்லை. எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் நேரங்களை குறைப்பதுடன் மதுக்கடைகளையும் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.