ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

Update: 2022-10-31 19:51 GMT

ஒப்பந்த முறையை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டுனர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர்கள், வரி வசூலர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்கள் என 1,800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்ககோரி நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் ஏராளமானோர் பணிகளை புறக்கணித்து நேற்று காலை 6 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாணை...

இதுகுறித்து ஒப்பந்த பணியாளர்கள் கூறியதாவது:-

தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை தனியாருக்கு வழங்கினால், நாங்கள் தற்போது வாங்கி கொண்டிருக்கும் ஊதியம் பாதியாக குறைக்கப்படும். உதாரணமாக தினக்கூலி அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.707 சம்பளம் பெறும் தூய்மைப் பணியாளருக்கான ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டு ரூ.350 ஆக வழங்கப்படும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, அவரவர் பணி மற்றும் பணியாற்றி வரும் ஆண்டுகளின் அடிப்படையில் சம்பளம் கணக்கிடும்போது சராசரியாக ரூ.500 எனும் ஊதிய விகிதத்தில் சம்பளம் பெறுவோருக்கு ரூ.250 மட்டுமே கிடைக்கும். இதனால், வாடகை வீடுகளில் வசித்து வரும் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடவேண்டும். எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. பின்னர் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், உங்களுடைய கோரிக்கை குறித்து, வீட்டுவசதித்துறை அமைச்சர் மூலமாக, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், தனியாருக்கு ஒப்படைப்பதற்கான உத்தரவில் தாங்கள் கையெழுத்து போடக்கூடாது என உறுதியளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பரபரப்பு

அதற்கு அவர்கள், நிச்சயம் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்ததை அடுத்து தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டம் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்