ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த கோரிய வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட் கள் வினியோகம் செய்யப்படுவதால் ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-24 23:50 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் சட்டத்துறை செயலாளர் சேவியர் பெலிக்ஸ் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது எங்கள் கட்சியினரை தி.மு.க.வினர் தாக்கினர். அவர்கள் மீது இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாதுகாப்பு வேண்டும்

எனவே, அவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்வதற்கு வசதியாக பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினரை நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள், வெப்காஸ்டிங் வசதிகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

நிறுத்தவேண்டும்

அதேபோல, வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் வினியோகம் செய்வதால், இந்த தேர்தலை நிறுத்த வேண்டும். தேர்தல் முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலுக்காக சட்டவிரோதமாக ஆளுங்கட்சியினர் அமைத்துள்ள கொட்டகைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர்கள் கண்ணன், ரவி ஆகியோர் தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தன.

உரிய நடவடிக்கை

அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜகோபாலன், பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு குழுக்களும், பறக் கும்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்ற ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மனுதாரர்கள் கூறும் புகார்கள் தொடர்பாக விசாரித்து, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தொகுதி முழுவதும் 163 கொட்டகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 107 கொட்டகைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. 42 கொட்டகைகளை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்றிவிட்டனர். மீதமுள்ள கொட்டகைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

வன்முறை

நாம் தமிழர் கட்சி சார்பில் ஆஜரான வக்கீல் சங்கர், 'மோதல் சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆளுங்கட்சியினர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை' என்று கூறினார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, 'நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றுவிட்டு வழித்தடத்தை மீறி பேரணி சென்றனர். பிளாஸ்டிக் பைப்புகளில் இரும்பு பைப்புகள் பொருத்தி வன்முறையில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க. இடையேயான மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன' என்று கூறினார்.

தலையிட முடியாது

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பணப் பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், அந்த பணத்தை யார் பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. எனவே, இந்த இடைத்தேர்தலை நிறுத்த கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே விரிவான உத்தரவுகளை இந்த ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரர்களின் புகார்களை பரிசீலித்து முடிவு எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட்டப்படுகிறது. இந்த வழக்குகளை முடித்துவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்