தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தமிழ்நாடுகவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து சமத்துவ மக்கள் கழகத்தினர் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-13 18:45 GMT

தூத்துக்குடியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சமத்துவ மக்கள் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து அவதூறாக பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்தும், மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் அண்ணாநகர் மெயின் ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கழக நிறவன தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண்சுரேஷ்குமார், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், துணை பொதுச் செயலாளர் காமராசு, கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை, பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

திரும்ப பெற..

பின்னர் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக கவர்னர் ஆர்.என் ரவி செயல்பட்டு வருகிறார். மக்கள் பல போராட்டங்கள் நடத்தி கிராமம் கிராமமாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி இருக்கிறார்கள். இந்த போராட்டம் யாருடைய தூண்டுதலும் கிடையாது. சுத்தமான காற்று, குடிநீர் நோய் நொடி இல்லாமல் இருக்கவே மக்களால் இந்த போராட்டம் நடைபெற்றது. வெளிநாட்டினர் தூண்டிவிட்டு இந்த போராட்டம் நடைபெற்றது என்று தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார். அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்