வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துஎன்ஜினீயரின் மனைவியை மிரட்டி 11 பவுன் சங்கிலி பறிப்பு
வில்லுக்குறி அருகே வீடு புகுந்து என்ஜினீயரின் மனைவியை மிரட்டி 11 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
திங்கள்சந்தை:
வில்லுக்குறி அருகே வீடு புகுந்து என்ஜினீயரின் மனைவியை மிரட்டி 11 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
என்ஜினீயர்
வில்லுக்குறி அருகே கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் ஹைஜின் ஜோஸ் (வயது 40). இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுஜா (38). இவர் நுள்ளிவிளையில் கட்டிட உள்அலங்கார கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு சுஜா வீட்டின் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவில் வீட்டின் மாடி கதவை உடைத்து கொண்டு மர்மநபர்கள் 2 பேர் உள்ளே புகுந்தனர்.
11 பவுன் நகை பறிப்பு
அவர்கள் சுஜா தூங்கிக்கொண்டு இருந்த அறைக்கு சென்றனர். ஒருவர் சுஜாவின் வாயை பொத்தி சத்தம் போடக்கூடாது என மிரட்டினார். அந்த சமயத்தில் மற்றொருவர் சுஜா அணிந்திருந்த 11 பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.
மேலும், சத்தம் போட்டால் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். நகையின் மதிப்பு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
இதுபற்றி சுஜா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் தப்பி ஓடிய 2 மர்மநபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 11 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.