நீடாமங்கலம் அருகே தனது வீட்டின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்ற பின் கல்லூரிக்கு திரும்பிய போது என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் உயிரிழந்தார்.
வேன் மோதியது
திருவாரூர் கமலாலயம்தென்கரை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். டாக்டர். இவருடைய மகன் விக்னவேல்ராம்(வயது20). இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை திருவாரூரில் தனது புதிய வீட்டின் புதுமனைபுகு விழாவில் விக்னவேல்ராம் கலந்து கொண்டார். பி்்ன்னர் அவர் திருவாரூரிலிருந்து தஞ்சையில் உள்ள தனது கல்லூரி விடுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் மண்டபம் பகுதியில் சென்ற ேபாது, தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
என்ஜினீயரிங் மாணவர் பலி
இதில் படுகாயமடைந்த விக்னவேல்ராமை அக்கம்பக்கத்தினர் மீட்டு நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே விக்னவேல்ராம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதிதாக கட்டப்பட்ட தனது வீட்டில் குடியேறும் முன்பு என்ஜினீயரிங் மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் திருவாரூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.