வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் ஆற்றில் மூழ்கி சாவு;தலைதீபாவளி கொண்டாட வந்த இடத்தில் பரிதாபம்

கீரிப்பாறை அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-29 18:24 GMT

அழகியபாண்டியபுரம்,

கீரிப்பாறை அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சாப்ட்வேர் என்ஜினீயர்

டெல்லி துவாரகா நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சியாம் (வயது28), சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும் நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த சுரேஷ் மகள் சுஷ்மா (26) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுஷ்மாவும் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். இருவரும் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் சியாமும் அவரது மனைவி சுஷ்மாவும் தலை தீபாவளி கொண்டாடுவதற்காக பார்வதிபுரத்தில் உள்ள சுஷ்மாவின் வீட்டுக்கு வந்திருந்தனர். நேற்று மதியம் இருவரும் காரில் காளிகேசம் பகுதியை சுற்றிப்பார்க்க வந்தனர். அங்குள்ள பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு இருவரும் காளிகேசம் ஆற்றில் குளிக்க இறங்கினர்.

மனைவி உயிர் தப்பினார்

அந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் ஆற்றில் அதிக அளவு வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. கணவன்-மனைவி இருவரும் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சுஷ்மா வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.

இதைப்பார்த்த சியாம் மனைவியை காப்பாற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டார். அப்போது ஆற்றில் அதிக அளவு வெள்ளம் வந்து கொண்டிருந்ததால் சியாம் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

இதற்கிடையே மனைவி சுஷ்மா வெள்ளத்தின் வேகத்தில் கரையோரம் ஒதுக்கப்பட்டு செடிகளை பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிணமாக மீட்பு

தனது கண் முன்பு கணவர் வெள்ளத்தில் மூழ்கியதை கண்டு சுஷ்மா கதறி அழுதார். இதுகுறித்து அந்த பகுதியில் நின்றவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி சியாமை தேடினர். அப்போது சியாம் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பார்த்து சுஷ்மா கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீரிப்பாறை போலீசார் மற்றும் அழகியபாண்டியபுரம் வனசரகர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சியாமின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைதீபாவளி கொண்டாட வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி சாப்ட்வேர் என்ஜினீயர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்