மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி
புளியங்குடி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலியானார்.;
புளியங்குடி:
வாசுதேவநல்லூர் பெத்தராஜூ தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் (வயது 25). டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கினார். அதற்காக ஆடி கிருத்திகையான நேற்று அதிகாலை புதிய மோட்டார் சைக்கிளில் திருமலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் மோட்டார் சைக்கிளுக்கும் பூஜை போட்டு மாலை அணிவித்து ஊருக்கு புறப்பட்டார்.
புளியங்குடியை அடுத்த வளைவான பாதையில் வேகமாக சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது. இதனால் அவர் அங்குள்ள மின்கம்பத்தில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதிய மோட்டார் சைக்கிள் வாங்கிய மறுநாளே மகன் இறந்ததை கண்டு கிருஷ்ணன் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.