டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் என்ஜினீயர் பலி

கந்தர்வகோட்டை அருகே டயர் வெடித்து கார் கவிழ்ந்ததில் என்ஜினீயர் பலியானார். மேலும் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2022-10-25 17:54 GMT

அணைக்கட்டில் குளிப்பதற்காக...

தஞ்சை மாவட்டம், நீலகிரி ஊராட்சியை சேர்ந்தவர் காமராஜ் மகன் ரங்கீஸ்வரன் (வயது 21). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தீபாவளியை கொண்டாட ரங்கீஸ்வரன் தனது சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து ரங்கீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களான பிரவீன் குமார் (25), ராம்கிஷோர் (24), அருண்குமார் (24) அன்பன் (24) ஆகிய 5 பேரும் காரில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நாட்டானி கிராமம் முதலை முத்து வாரியில் உள்ள அணைக்கட்டில் குளிப்பதற்காக வந்தனர். பின்னர் அனைவரும் அணைக்கட்டில் குளித்து விட்டு வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.

என்ஜினீயர் பலி

நாட்டானி பஸ் நிலையம் அருேக வந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கார் கவிழ்ந்தது. இதில் ரங்கீஸ்வரன் காரின் அடிப்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த பிரவீன்குமார், ராம் கிஷோர் ஆகிய 2 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவருக்கும் காயம் இல்லை.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார், ரங்கீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் அருண்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்