கடையின் உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது

கடையின் உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-28 06:56 GMT

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு வாகனங்களுக்கான பழுதுநீக்கும் பணிமனை காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் வினியோகம் செய்து வரும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது கடைக்கு உரிமம் புதுப்பிக்க அந்த பணிமனையின் அலுவலக உதவி என்ஜினீயர் மோகனை அணுகினார்.

ரூ.30 ஆயிரம் கொடுத்தால் உரிமத்தை புதுப்பிக்க ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை கொடுக்குமாறு தெரிவித்தனர். அதன்படி வெங்கடேசன், சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு வாகன தானியங்கி பணிமனை மையத்திற்கு சென்றார். அங்கு இருந்த பொறுப்பாளர் முரளியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளார். அதனை முரளி உதவி என்ஜினீயர் மோகனிடம் கொடுத்துள்ளார். இதனை கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் கீதா, அண்ணாதுரை ஆகியோர் கையும் களவுமாக மோகன் மற்றும் முரளியை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்