கடலூரில் நடைபயிற்சியில் ஈடுபட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் செல்போன் பறிப்பு வாலிபர் கைது

கடலூரில் நடைபயிற்சியில் ஈடுபட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-29 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருப்பவர் டெய்சிகுமார்(வயது 57). சம்பவத்தன்று காலை இவர் கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், டெய்சிகுமாரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், டெய்சிகுமாரிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதில் பதறிய அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் அவர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் டெய்சிகுமார் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செம்மண்டலம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் கோண்டூரை சேர்ந்த சஞ்சய் (20) என்பவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து டெய்சிகுமாரிடம் செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சஞ்சயை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்