அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது - மம்தா பானர்ஜி
அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
இன்று மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர் .
5 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முந்தைய அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவது நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.