அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் பொன்முடி தூத்துக்குடி வருகை ரத்து
அமலாக்கத்துறை சோதனை காரணமாக அமைச்சர் பொன்முடி தூத்துக்குடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 'உயர்வுக்கு படி' மற்றும் கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. மேலும் நான் முதல்வன் திட்டத்தில் 'உயர்வுக்கு படி' உடனடி சேர்க்கை பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு ஆணைகளையும், கல்வி பயில புத்தகங்களையும், 15 பேருக்கு கல்வி கடனும் வழங்கப்படுகிறது.
மேலும் பணியில் இருந்தபோது மரணம் அடைந்த சத்துணவு பணியாளர்களின் வாரிசுகள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை, புதுமைப்பெண் திட்ட விளக்க கையேடுகள், சிறந்த கல்லூரிக்கு பரிசு ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வி துறை அமைச்சருமான அமைச்சர் பொன்முடி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதால் அவரது தூத்துக்குடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த நிகழ்ச்சி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நாளை(செவ்வாய்க் கிழமை) நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்வதாக இருந்தது. இது தொடர்பாக பல்கலை கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, அமைச்சர் பொன்முடி நாளை விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றனர்.