ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்

Update: 2023-01-28 18:45 GMT

கள்ளக்குறிச்சி

குறைதீர்ப்பு கூட்டம்

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கள்ளக்குறிச்சி II சர்க்கரை ஆலை நிர்வாக மேலாண்மை இயக்குனர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

உழவர் பாதுகாப்பு அட்டை

காடியார் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். திருநாவலூர் ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். சங்கராபுரம் தாலுகாவில் விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டைகள் வழங்க வேண்டும், புதுப்பாலப்பட்டு கிராமத்தில் வாரச்சந்தை அமைக்க வேண்டும், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட பாசார் கிராமத்தில் உள்ள ஏரி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். இதை கேட்டறிந்த வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் (திட்டம்) சுந்தரம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சாந்தி, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன், முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்