நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள்

நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள்

Update: 2023-07-30 12:24 GMT

அனுப்பர்பாளையம்

போயம்பாளையம் சந்திப்பில் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அங்கு தாறுமாறாக செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு

திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் பி.என்.ரோடு ஒன்றாக உள்ளது. அந்த சாலையில் போயம்பாளையம் சந்திப்பு என்பது திருப்பூர், பெருமாநல்லூர், கங்காநகர், பொம்மநாயக்கன்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் 4 சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதனால் அங்கு எந்த நேரமும் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போயம்பாளையம் 4 ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் மற்றும் அதை சுற்றி உள்ள நடைபாதைகள் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர்.

அங்கு பூக்கடை, பழக்கடை மற்றும் தள்ளுவண்டி கடைகள் என ஏராளமான கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளதால் சாலையின் அளவு மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் மீது தனியார் ஆம்புலன்சு மோதி அந்த பெண் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றது. இதற்கும் சாலையை கடைகள் ஆக்கிரமித்ததே முக்கிய காரணமாக அமைந்தது. இதேபோல் போயம்பாளையம் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிக்னல் பெரும்பாலான நேரங்களில் செயல்படாமல் உள்ளது.

நடவடிக்கை

மேலும் அங்கு போக்குவரத்தை சரி செய்ய போலீசாரும் இருப்பதில்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதுடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலையை கடக்கும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுவும் அடிக்கடி விபத்து ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

எனவே போயம்பாளையம் சந்திப்பில் 4 சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்றும், தாறுமாறாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் தானியங்கி சிக்னல் அனைத்து நேரமும் செயல்பட நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்