'என் மண் என் மக்கள்' 3-ம் கட்ட நடைபயணம்: அண்ணாமலை, அவினாசியில் 16-ந்தேதி தொடங்குகிறார்

‘என் மண் என் மக்கள்' 3-ம் கட்ட நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை வருகிற 16-ந்தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறார். இதில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார்.

Update: 2023-10-13 23:56 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில் 'என் மண் என் மக்கள்' என்ற நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை தொடங்கினார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

அதன்படி முதற்கட்ட நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலை தொடங்கி, கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி நிறைவு செய்தார். மொத்தம் 23 நாட்கள் மேற்கொண்ட முதல்கட்ட நடைபயணத்தில் 41 தொகுதிகளில் மக்களைச் சந்தித்து, மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கூட்டங்களில் பேசினார்.

3-ம் கட்ட நடைபயணம்

இதன் தொடர்ச்சியாக, என் மண் என் மக்கள் 2-ம் கட்ட நடைபயணத்தை ஆலங்குளத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி அண்ணாமலை தொடங்கினார். தென்காசி, ராஜபாளையம், கம்பம், கொடைக்கானல், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை, ஊட்டி போன்ற பகுதிகளில் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு கடந்த மாதம் 27-ந்தேதி கோவையில் நிறைவு செய்தார்.

இந்த நிலையில் 3-ம் கட்ட நடைபயணம் கடந்த 6-ந்தேதி தொடங்க இருந்தது. ஆனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்தி வைக்கப்பட்ட 3-ம் கட்ட நடைபயணத்தை வருகிற 16-ந்தேதி (நாளை மறுதினம்) அண்ணாமலை மீண்டும் தொடங்க இருப்பதாக பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகம் தெரிவித்தது.

நாளை மறுதினம் தொடங்குகிறார்

அந்த வகையில், என் மண் என் மக்கள் 3-ம் கட்ட நடைபயணம் மேட்டுப்பாளையம் தொகுதியில் வரும் அவினாசியில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) அண்ணாமலை தொடங்குகிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க நிகழ்வில், மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளதாக பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவரும், என் மண் என் மக்கள் நடைபயணத்தின் இணை பொறுப்பாளருமான எஸ்.அமர் பிரசாத் ரெட்டி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 3-ம் கட்ட நடைபயணத்தை அவினாசியில் தொடங்கி, பவானி, அந்தியூர், கோபி, பல்லடம், சூலூர், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, சங்ககிரி, குமாரபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்தி வேலூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மணப்பாறை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருவரம்பூர், ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மணச்சநல்லூர் என சென்று அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதி லால்குடியில் நிறைவு செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்