பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-16 11:31 GMT

சென்னை ,

பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த பத்தாண்டுகளில் 2.7 லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, பொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் 42.50% பணியிடங்கள் ஒப்பந்தப் பணிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் சமூகநீதி பலி கொடுக்கப்படுவதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புச் சூழல் 2012-13 முதல் 2021-22 வரையிலான காலத்தில் எவ்வாறு மாறியிருக்கிறது என்பது குறித்த ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பத்தாண்டு காலத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 2.70 லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 2012-13ஆம் ஆண்டில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம் 17.30 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன.

ஆனால், 2021-22ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.60 லட்சமாக குறைந்துவிட்டது. அதேபோல், 2013ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி பொதுத்துறை நிறுவன பணியாளர்களில் 19.50 விழுக்காட்டினர் மட்டுமே ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தனர். ஆனால், 2022-ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்த அளவு 42.50% ஆக அதிகரித்திருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்