மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க வலியுறுத்தல்

மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-07-11 18:33 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு பொறுப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். கட்சியின் மூத்த உறுப்பினர் உலகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்தில் அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் தனியார் வீடு கட்டும் பணிகள் ஆகியவற்றுக்கு மணல் கிடைக்காத காரணத்தால் அதிக விலை கொடுத்து எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே அரசு மற்றும் தனியார் கட்டிட பணிகளை கருத்தில் கொண்டும், மாட்டு வண்டி தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் உடனடியாக இப்பகுதியில் மணல் குவாரி அமைக்க வேண்டும். தா.பழூர் காவிரி டெல்டா பாசன பகுதியில் அதிக அளவில் நெல் உற்பத்தி நடைபெறுவதாலும், இப்பகுதியில் வேறு எந்த தொழிற்சாலைகளும் இல்லாததாலும் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக நவீன அரிசி ஆலையை அரசு சார்பில் செயல்படுத்த வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான யூரியா மற்றும் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் தேவசகாயம், மாவட்ட குழு உறுப்பினர் ஆனைமுத்து உள்ளிட்ட கட்சியின் ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்