காவிரி ,வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 3 நிலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 3 நிலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 3 நிலைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தொடர் போராட்டம்
காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு. மாநில பொதுச்செயலாளர். எம்.அர்ச்சுணன், மாநில தலைவர் மாரிமுத்து ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி,வைகை, கிருதுமால்,குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எங்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இத்திட்டத்திற்கு 14-2-2021-ல் விராலிமலை அருகில் அடிக்கல் நாட்டப்பட்டது.
3 நிலைகள்
இதில் காவிரி ஆற்றில் கரூர் மாயனூர் கதவணையில் இருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் முதல் நிலையாகவும், தெற்கு வெள்ளாறில் இருந்து வைகை ஆறு வரை 108 கிலோமீட்டர் இரண்டாம் நிலையாகவும், வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டி புதுப்பட்டி குண்டாறு வரை 34 கிலோமீட்டர் மூன்றாம் நிலையாகவும் ஆக மொத்தம் 260 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இக்கால்வாய் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
நிதி ஒதுக்க வேண்டும்
இத்திட்டத்திற்கு 2021-2022 பட்ஜெட்டில் 760 கோடி ரூபாயும், .2022-2023 பட்ஜெட்டில் 280 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. மாயனூர் ஜீரோ பாய்ண்ட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்த திட்டம் நிறைவேற பல ஆண்டுகள் ஆகிவிடும்.
எனவே காவிரி,வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நடப்பு பட்ஜெட்டில் ஒவ்வொரு நிலைக்கும் ரூ.1000 கோடி ரூபாய் வீதம் நிதி ஒதுக்க வலியுறுத்தியும், மூன்று நிலைகளிலும் ஏக காலத்தில் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்க வலியுறுத்தியும் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு, புனித ஜார்ஜ் கோட்டை நோக்கி கவன ஈர்ப்பு பேரணி நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.