விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானைகள்

குடியாத்தம் அருகே யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. அப்போது யானைகள் துரத்தியதில் விவசாயி ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

Update: 2023-04-24 12:47 GMT

யானைகள் அட்டகாசம்

குடியாத்தம் அருகே தமிழக வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் யானைகள் அவ்வப்போது புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை சற்று குறைந்திருந்தது.

இந்த நிலையில் குடியாத்தம், அடுத்த வி.டி.பாளையம், டி.பி. பாளையம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

நேற்று அதிகாலை 2 யானைகள் வி.டி.பாளையம் ஊராட்சி கொத்தூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டு பிளிரியபடி இருந்தது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் வெளியில் வர பயந்து வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.

உயிர் தப்பினார்

அந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து மாமரங்கள், கேழ்வரகு, நெற் பயிர்களை நாசம் செய்தது. இதனையடுத்து விவசாயிகள் ஒன்று திரண்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் விரட்டியதில் விவசாயி சுந்தர்ராஜ் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் காலை வரை வரவில்லை என கூறப்படுகிறது. கிராம மக்கள், விவசாயிகள் யானைகளை பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பல மாதங்களாக யானைகள் தொல்லை இல்லாமல் இருந்தது. யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வனத்துறையினர் யானைகளை விரட்டுவதில் அக்கறை காட்டுவதில்லை எனவும், காலையில் வந்து சேதம் அடைந்த விளைநிலங்களை பார்வையிட்டு சேத விவரங்களை மட்டும் கேட்டு விட்டு செல்கின்றனர். இரவில் தினமும் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம் அலட்சியத்துடன் செயல்படும் குடியாத்தம் வனத்துறையினர் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்