கரும்பு தோட்டத்தில் புகுந்த யானைகள்
காரிமங்கலம் அருகே கரும்பு தோட்டத்துக்குள் யானைகள் புகுந்து விட்டன. அதனை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே கரும்பு தோட்டத்துக்குள் யானைகள் புகுந்து விட்டன. அதனை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.
கரும்பு தோட்டம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த முக்குளம் பஞ்சாயத்து குட்டகாட்டூர் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. தண்ணீர் தேடி வந்த மூன்று காட்டு யானைகள் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது.
யானைகள் நடமாட்டத்தை அறிந்த சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கரும்பு தோட்டம் பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுக்குள் விரட்ட தீவிரம்
தகவல் அறிந்த பாலக்கோடு வனத்துறையினர், காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி உள்ளனர்.
தண்ணீர் தேடி அலைந்த யானைகள், வழிதவறி கரும்பு தோட்டத்துக்குள் வந்துள்ளதாகவும், விரைவில் யானைகள் காட்டுக்குள் விரட்டப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.