பவானிசாகர் அருகே குட்டிகளுடன் ரோட்டை கடந்த யானைகள்

பவானிசாகர் அருகே குட்டிகளுடன் யானைகள் சாலையை கடந்து சென்றன. வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-01 21:06 GMT

பவானிசாகர்:

பவானிசாகர் அருகே குட்டிகளுடன் யானைகள் சாலையை கடந்து சென்றன. வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அணைக்கு சென்ற யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இதை ஒட்டி பவானிசாகர் அணை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் அவ்வப்போது காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள பவானிசாகர் அணை நீர்தேக்கத்திற்கு தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று மாலை குட்டிகளுடன் யானைகள் வனப்பகுதியில் இருந்து அருகே உள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு வந்தன. பின்னர் அணையில் தாகம் தீர தண்ணீரை குடித்தன.

ரோட்டை கடந்தன

அதன்பின்னர் அங்கிருந்து வனப்பகுதி வழியாக காராச்சிக்கொரையில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் தார்சாலைக்கு குட்டிகளுடன் யானைகள் வந்தன. பின்னர் கூட்டமாக யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக ரோட்டை கடந்து செல்ல தொடங்கின. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அச்சமடைந்தனர். தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு யானைகள் ரோட்டை கடந்து சென்றன. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'வனப்பகுதியில் உள்ள சாலைகளில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்