தர்மபுரி வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி17-ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது

Update: 2023-05-11 19:00 GMT

தர்மபுரி வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி வருகிற 17- ந்தேதி முதல் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

யானைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி உள்ளிட்ட 25 வன கோட்டங்களில் இருக்கும் 465 பிரிவுகளில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வன பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்.

யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ள பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடு தயாரிக்கப்பட்டு வனக்கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு முறைகளில் நடைபெறும்.

முறையான பயிற்சி

இதன்படி வருகிற 17- ந்தேதி முதல் தொடங்கி 3 நாட்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். 17- ந்தேதி பிரிவுகள் வாரியாக யானைகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். வருகிற 18-ந்தேதி அதே பிரிவுகளில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அடையாளம் காணப்பட்ட வழிகளில் நடந்து சென்று வழிகளின் இருபுறங்களிலும் யானைகளின் சாணத்தை அடையாளம் காணும் மறைமுக கணக்கெடுப்பு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து வருகிற 19- ந்தேதி அந்த பிரிவுகளில் உள்ள நீர்நிலைகளுக்கு வரும் யானைகளின் கூட்டத்தை கண்டறிய நீர்க்குழி கணக்கெடுப்பு முறை மேற்கொள்ளப்படும்.

இந்த மதிப்பீட்டிற்கு முன் அனைத்து களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும், வனத்துறையில் பணிபுரியும் நிபுணர்கள், உயிரியலாளர்கள் மூலம் முறையான பயிற்சி அளிக்கப்படும். மேற்கண்ட மதிப்பீடு முடிந்ததும் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விவரங்களையும் தொகுக்க முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்