கிராம மக்களை அச்சுறுத்திய யானைகள்

தேன்கனிக்கோட்டை பகுதியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த 70-க்கும் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டினர்.

Update: 2023-01-04 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பகுதியில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த 70-க்கும் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டினர்.

யானைகள் அட்டகாசம்

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 200-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சானமாவு, ஊடேதுர்க்கம், நொகனூர், ஜவளகிரி, தளி ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன், ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 30-க்கும் மேற்பட்டோர் சானமாவு, ஊடேதுர்க்கம், நொகனூர், தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் பல்வேறு குழுக்களாக சுற்றித்திரிந்த 70-க்கும் மேற்பட்ட யானைகளை ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அனைத்து யானைகளையும் நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்ற வனத்துறையினர் அங்கிருந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டினர்.

விவசாயிகள் நிம்மதி

அப்போது நொகனூர் வனப்பகுதியில் இருந்த யானைகள் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. இந்த யானைகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் அப்பகுதியில் வனத்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர். யானைகள் அனைத்தும் சாலையை கடந்த பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

நொகனூர் வனப்பகுதியில் இருந்து கஸ்பா, தாவரக்கரை, தின்னூர், முள்பிளாட், அகலக்கோட்டை, ஜவளகிரி வழியாக 70-க்கும் மேற்பட்ட யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு வனத்துறையினர் விரட்டி செல்கின்றனர். தேன்கனிக்கோட்டை பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த 70-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டப்பட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த யானைகள் மீண்டும் வராமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்