சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2-வது நாளாக யானைகள் கணக்கெடுக்கும் பணி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று 2-வது நாளாக யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

Update: 2023-05-18 20:17 GMT

அந்தியூர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று 2-வது நாளாக யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

2-வது நாளாக...

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு பணி சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, கடம்பூர், டி.என்.பாளையம், தலமலை ஆகிய வனச்சரகங்களிலும், ஈரோடு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அந்தியூர், பர்கூர், தட்டகரை, சென்னம்பட்டி வனச்சரகங்கள் மற்றும் சேலம் கோட்டத்துக்குட்பட்ட மேட்டூர் வனச்சரகத்திலும் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளன்று யானைகளின் கால்தடம், கழிவுகளை வைத்து கணக்கிடப்பட்டது.

2-வது நாளான நேற்று அந்தியூர் வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதற்காக காலை 6 மணி அளவில் அந்தியூர் வனச்சரகர் உத்தர சாமி தலைமையில் வனவர்கள் சக்திவேல், திருமூர்த்தி, விசுவநாதன் மற்றும் வனக்காப்பாளர்கள், வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் சென்றனர். பின்னர் நேர்கோடு வரைந்து அதில் யானை நடந்து செல்லும் போது யானையின் லத்தியை (சாணத்தை) வைத்து கணக்கெடுத்தனர்.

நீர் நிலைகள்

யானைகள் அதிக எண்ணிக்கையில் நடமாடக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கணக்கெடுக்கப்பட்டது. மேலும் மறைமுகமாக நின்று ஆண் யானை, பெண் யானை, மக்னா யானை என தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டது.

அதேபோல பர்கூர், தட்டக்கரை வனப்பகுதிகளிலும், சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, கடம்பூர், டி.என்.பாளையம், தலமலை ஆகிய வனச்சரகங்களிலும் வனத்துறையினர் நேற்று 2-வது நாளாக யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) 3-வது நாளாக யானைகள் தண்ணீர் அருந்த வரக்கூடிய நீர் நிலைகளில் அவற்றை நேரடியாக கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்