பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்த-திருப்புவனத்தில் தயாரான 18 அடி உயர ராட்சத அரிவாள்

பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக திருப்புவனத்தில் 18 அடி உயர ராட்சத அரிவாள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-01-12 18:45 GMT

திருப்புவனம்

பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக திருப்புவனத்தில் 18 அடி உயர ராட்சத அரிவாள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

அரிவாள் பட்டறைகள்

திருப்புவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாய தேவைகளுக்கான மண்வெட்டி, கோடாரி, கதிர் அறுக்கும் அரிவாள், வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகு வெட்ட பயன்படும் அரிவாள், மேலும் இறைச்சி வெட்ட பயன்படும் கத்திகள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அரிவாள்களையும் தயாரித்து கொடுக்கின்றனர்.

இதுகுறித்து 18 அடி நீள அரிவாள் தயாரித்துள்ள சதீஷ்குமார் நாகேந்திரன் கூறியதாவது:-

நேர்த்திக்கடன்

எங்களிடம் மதுரை சர்வேயர்காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 18 அடி நீளத்திற்கு கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்க ராட்சத அரிவாள் தயார் செய்ய வேண்டும் என்றனர். அடிக்கு ரூ 2 ஆயிரம் வீதம் கூலி பேசி தயார் செய்துள்ளோம். இந்த ராட்சத அரிவாள் தயாரிக்க 15 முதல் 20 நாட்கள் ஆனது. இதில் அரிவாள் 15 அடி உயரத்திலும் கைப்பிடி 3 அடி உயரத்திலும் மொத்த 18 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிவாள் மொத்த எடை 250 கிலோ கொண்டது. இந்த ராட்சத அரிவாள் மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேர்த்திக்கடனாக வழங்க தயார் செய்துள்ளோம். இந்த அரிவாள் பெரிய சரக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது,

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்