தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்

தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-06-09 18:53 GMT

சென்னை,

9 மாதங்களுக்கு முன்பு, வீடு, வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றிற்கான மின்கட்டணத்தை பன் மடங்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைத்த தி.மு.க. அரசு, தற்போது வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்கிறது.

மின்கட்டண உயர்வுக்கு காரணம் முந்தைய அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் என்று தி.மு.க. அரசு செய்திக்குறிப்பில் சூசகமாக தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

ரத்து

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை தி.மு.க. அரசு உயர்த்தியிருப்பது நியாயமற்ற செயல். 'சொல்வதை செய்வோம்' என்று மக்களிடம் வாக்குறுதி அளித்துவிட்டு, சொல்லாததை செய்யும் அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.

விலைவாசி உயர்வினை கருத்தில்கொண்டு, ஏழை-எளிய மக்களின் நலனையும், வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நலனையும் காக்கும் வண்ணம் மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா

வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைமையிலான அரசு வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணம் உயரும் என அறிவித்துள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இது தமிழக மக்களுக்கு செய்கின்ற மிகப் பெரிய துரோகமாகும். அதிலும் குறிப்பாக 10 மாதங்களுக்கு முன்பாக மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது அதற்குள் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

எனவே, தி.மு.க.வினர் தமிழக மக்களின் நலனையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

என்.ஆர்.தனபாலன்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மின் கட்டணம் உயரவில்லை என்ற மாயையை ஏற்படுத்திவிட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே உயர்வு என்ற அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். இதனால் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்