குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியைப் பெருக்குவதுடன், நமது நாட்டின் பொருளாதார அமைப்பின் துடிப்பான அங்கமாக, உயிர்நாடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விளங்குகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. பொருளாதாரத்தின் ஆணிவேராக விளங்கும் இப்படிப்பட்ட நிறுவனங்கள் செயலிழந்து போகும் அளவுக்கு தி.மு.க. அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
மின்சாரக் கட்டணத்துடன் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் நிலைக் கட்டணம் தடை செய்யப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டதோடு மட்டுமல்லாமல், நிலைக் கட்டணம் உட்பட அனைத்துக் மின் கட்டணங்களையும் உயர்த்தி வீடு, வணிகம், தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் என அனைத்து மின் உபயோகிப்பாளர்களையும் நிலைகுலைய வைத்துள்ள தி.மு.க. அரசு.
உச்ச நேர மின் கட்டணத்தை ரத்து செய்யுமாறும், 430 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ள நிலைக் கட்டணத்தை திரும்பப் பெறுமாறும், இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான 5 விழுக்காடு சலுகையை 20 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென்றும், மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்திற்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், காற்றாலை மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான திறந்த வழித்தடக் கட்டணத்தை ஒரு ரூபாயிலிருந்து 20 காசாக குறைக்க வேண்டும் என்றும், 3B கட்டண விகிதத்திலிருந்து 3A1 கட்டண விகிதத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு போராடி வருகிறது. மின் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை தொழில் துறையினர் அளித்துள்ளனர். இந்தக் கோரிக்கைகள் குறித்து எவ்விதமான அறிவிப்பும் வராத சூழ்நிலையில், தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு கதவடைப்பு போராட்டத்தினையும், மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தினையும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், யானைப் பசிக்கு சோளப் பொறி என்ற பழமொழிக்கேற்ப, 12 கிலோ வாட்டுக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்களை 3A1 கட்டண விகிதத்திற்கு மாற்ற தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட ஒரு சில சலுகைகளை மட்டும் முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது குறு, சிறு மற்றம் நடுத்தரத் தொழில் துறையினரை மிகுந்த அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டண உயர்வு தொழில் நிறுவனங்களை நலிந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களுடைய முக்கியமான கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாத நிலையில், திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழில் துறையினர் அறிவித்துள்ளனர். மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் போராட்டத்தில் இறங்க உள்ளன.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்று முதல்-அமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.