ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள மாவடி ஆர்ச்விளை வடக்குத்தெருவை சேர்ந்தவர் சாமித்துரை (வயது 55). இவர் திருக்குறுங்குடி மின்வாரியத்தில் ஒயர்மேனாக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாவடி-டோனாவூர் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாமித்துரை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். பலியான சாமித்துரைக்கு மனைவியும், 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர்.