வேலுண்டு வினையில்லை என்றபடி கந்தனை வணங்குவோம்: எல்.முருகன்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.;
சென்னை,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தற்போது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சூரனை வதம் செய்வதற்காக சுவாமி ஜெயந்திநாதர், கோவிலில் இருந்து எழுந்தருளி சற்று நேரத்தில் கடற்கரைக்கு வருகை தர உள்ளார். தொடர்ந்து, தரகாசூரன், சிங்கமுகாசூரன் மற்றும் சூரபத்மனை தனது வேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்ய உள்ளார். சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தையொட்டி மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி.. தமிழ்க் கடவுள் ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில், தீயவை அழித்து நன்மையை விதைக்கின்ற விதமாக இன்று நடைபெறுகின்ற சூரசம்ஹார நிகழ்வைப் போற்றி, வேலுண்டு வினையில்லை என்றபடி கந்தனை வணங்குவோம்..! வெற்றிவேல்..! வீரவேல்..!. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.