விசைத்தறி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தமிழக அரசு விசைத்தறி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
சென்னை,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊதிய உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் பகுதியில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விசைத்தறி தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தால் உற்பத்தி மட்டுமல்லாது தொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருக்கும் நிலையில், அது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விசைத்தறி தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் விசைத்தறி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து அவர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தொழிலாளர் நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.