மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
கரூர் மண்மங்கலம் அருகே உள்ள நன்னியூர் புதூரை சேர்ந்தவர் திவாகர் (வயது 23). எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எந்திரம் மூலம் சுவற்றில் துளையிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திவாகர் மீது மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திவாகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.