மின்சாரம் தாக்கி மின்ஊழியர் சாவு

திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனியார் மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-09 15:44 GMT

திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனியார் மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்இணைப்பு பழுதை சரிசெய்ய

திருவண்ணாமலை அடிஅண்ணாமலை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் முனியப்பன் (வயது 27), மின்வாரியத்தில் ஒப்பந்த பணியின் அடிப்படையில் தற்காலிக மின்ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் இவரும், அவருடன் பணிபுரியும் கமலேஷ், வயர்மேன் குமார் ஆகியோர் கடந்த 6-ந்தேதி திருவண்ணாமலை டவுன் காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மின்இணைப்பு பழுதை சரி செய்ய சென்றனர்.

தொடர்ந்து முனியப்பன் மின்கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் போில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியப்பன் மின்கம்பத்தில் ஏறி மின்இணைப்பு பழுதை சரி செய்யும் போது தனியார் மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால் ஒயரில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து முனியப்பன் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முனியப்பனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்