தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் துணி துவைத்தபோது, மின்சாரம் தாக்கி சத்துணவு அமைப்பாளர் பலியானார்.
சத்துணவு அமைப்பாளர்
தேன்கனிக்கோட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பானுமூர்த்தி. இவருடைய மனைவி மீனா (வயது 53). இவர் தேன்கனிக்கோட்டை அரசு உருது நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் மீனா வீட்டில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார்.
அப்போது தொட்டியில் தண்ணீர் தீர்ந்தது. இதையடுத்து அவர் மின் மோட்டார் மூலம் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றினார். தண்ணீர் நிரம்பியவுடன் அவர் மின் மோட்டாரின் சுவிட்சை ஆப் செய்தார். அப்போது திடீரென மீனாவை மின்சாரம்தாக்கியது.
மின்சாரம் தாக்கி சாவு
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிறுது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். பின்னர் மின்சாரம் தாக்கி பலியான மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டையில் மின்சாரம் தாக்கி சத்துணவு அமைப்பாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.