திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மரணத்தால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மரணத்தால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதற்கான தேர்தல் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-30 21:01 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார்.

இடைத்தேர்தல்

இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பல்வேறு அரசியில் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் குவிய தொடங்கி உள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டு உள்ளனர்.

கட்சி பிரமுகர்கள் நாள்தோறும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் கரை வேட்டி கட்டியவர்களாகவே காட்சி அளிக்கிறார்கள். மேலும் அவர்களுடன் வாக்கு சேகரிப்பில் தொண்டர்களும் படை எடுத்து செல்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தினமும் காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7-ந்தேதி கடைசி நாளாகும். 8-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையில் வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. ஏற்கனவே வேட்பு மனு தாக்கலுக்கான படிவம், தபால் கவர் போன்றவற்றை ஈரோடு மாநகராட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. அவை மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. வேட்பாளர்களில் பொது பிரிவினர் முன்வைப்பு தொகையாக (டெபாசிட்) ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தேர்தல் விதிமுறை

வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:-

வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும். 3 கார்களுக்கு மட்டுமே அனுமதி. வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவுக்கு முன்பாகவே கார்களை நிறுத்தி விட வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொதுப்பிரிவு வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ரொக்கமாக மட்டுமே செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்.

எல்லைக்கோடு

இதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 திசைகளிலும் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை, கச்சேரி வீதி, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, காமராஜ் சாலைகளில் 100 மீட்டர், 200 மீட்டர் என எல்லைக்கோடுகள் போடப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகள் அமைந்து இருப்பதால் முக்கிய இடங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி எல்லை ஆரம்பம், எல்லை முடிவு என்று பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் 100 மீட்டர் எல்லைக்கோட்டுக்குள் வந்தவுடன் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா? என போலீசார், தேர்தல் பிரிவு அலுவலர் உள்ளிட்டோர் மூலமாக கண்காணிக்கப்படுவர். எனவே வேட்பு மனுதாக்கலின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறினார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் விடுதலை கழகம், இந்திய திராவிட மக்கள் கட்சி, சமாஜ்வாடி கட்சி மற்றும் சுயேச்சைகள் என 13 பேர் வேட்பு மனு படிவங்களை பெற்று சென்றுள்ளனர். ஒருவருக்கு 4 வேட்பு மனு படிவங்கள் வழங்கப்பட்டன.

48 பேர்

கிழக்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துகிருஷ்ணன் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க., இந்திய குடியுரிமை கட்சி, அனைத்து இந்திய சமுதாய முன்னேற்ற கழகம், தமிழக தாயக முன்னேற்ற கட்சி, விடுதலை களம், தேசிய மக்கள் கழகம், இந்திய திராவிட மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்கள் என இதுவரை மொத்தம் 48 பேர் வேட்பு மனுக்களை பெற்று சென்று உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்