நாகமலைபுதுக்கோட்டை அருகே மூதாட்டி சரமாரி வெட்டிக்கொலை - மகன் கைது
நாகமலைபுதுக்கோட்டை அருகே மூதாட்டியை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை அருகே மூதாட்டியை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறு
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மேலக்குயில்குடியை சேர்ந்தவர் பம்பையத்தேவர். இவருடைய மனைவி சிந்தாமணி (வயது 75). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். பம்பையத்தேவர் ஏற்கனவே இறந்துவிட்டார். சிந்தாமணி தனது கடைசி மகன் வேந்தர் (55) என்பவருடன் வசித்து வந்தார். வேந்தர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும் அவர் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. வேந்தர் அவ்வப்போது மது குடித்து விட்டு வந்து தனது தாயிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வெட்டிக்கொலை
இந்நிலையில் நேற்று அதிகாலை மதுபோதையிலிருந்த வேந்தர் சொத்தை பிரித்து தருமாறு கூறி தாய் சிந்தாமணியிடம் மீண்டும் தகராறு செய்தார். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வேந்தர் வீட்டில் இருந்த அரிவாளால் தனது தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிந்தாமணி பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்தாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேந்தரை கைது செய்தனர்.