மணிமுக்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் முதியவர் கைது
வேப்பூர் அருகே மணிமுக்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டார். நகைக்காக பெண்ணை அடித்துக் கொன்றது அம்பலமாகி உள்ளது.
வேப்பூர் அருகே நல்லூர் வில்வனேஸ்வரர் கோவில் அருகில் மணிமுக்தா ஆற்றில் கடந்த 18-ந் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடித்துக்கொன்றது அம்பலம்
விசாரணையில், அந்த பெண் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மனைவி நல்லம்மாள்(வயது 60) என்பதும், அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி புதுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (61) என்பவர் வீட்டில் தங்கி இருந்து வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ராஜேந்திரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நல்லம்மாளை நல்லூர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்து அவர் அணிந்திருந்த 29 கிராம் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.