எழும்பூர் அரசு தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் உணவக கட்டிடம்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

எழும்பூர் அரசு தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் காத்திருப்பு அறை மற்றும் உணவக கட்டிடத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-06-29 00:13 GMT

சென்னை,

சென்னை, எழும்பூர் அரசு தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் ரூ.5 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர், மேற்கொள்ளப்பட உள்ள பணியினை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், பிரபாகர் ராஜா, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழு தலைவர்கள் தனசேகரன், சிற்றரசு, மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குனர் சாந்தி மலர், சென்னை மருத்துவ கல்லூரி டீன் தேரணி ராஜன், அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் ரெமா சந்திர மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கலைஞர் நினைவு மாரத்தான்

எழும்பூர் அரசு தாய் சேய் நல ஆஸ்பத்திரிக்கு தமிழ்நாடு மட்டுமில்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய குழந்தைகளை ஆஸ்பத்திரிகளில் அனுமதித்துவிட்டு தங்குமிடம், உணவு வசதிகளின்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு சென்னையில் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், 43 ஆயிரத்து 231 பேர் பயங்கேற்றார்கள். பங்கேற்றவர்கள் பதிவு கட்டணமாக தலா ரூ.300 செலுத்தினார்கள்.

பதிவு கட்டணத்தில் சேவை வரி போக ரூ.1 கோடியே 22 லட்சத்து 2 ஆயிரத்து 450 அன்றைக்கே மேடையில் முதல்-அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பதிவு கட்டணத்தை ஏதாவது ஒரு முக்கியமான காரியத்திற்கு செலவிடலாம் என முதல்-அமைச்சர் தெரிவித்தார். அப்போது, எழும்பூர் தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் இதுபோன்ற நிலை இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூரிலேயே காத்திருப்பு அறை, உணவு வழங்கும் அறை போன்ற வசதிகளை இந்த தொகை மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யலாம் என்றார்.

கருத்தரிப்பு மையம்

இந்த நிலையில், இன்றைக்கு ரூ.5 கோடியே 89 லட்சம் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

எழும்பூர் அரசு தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் 100 பேருக்கு படுக்கை வசதிகளுடன் 12 குளியலறைகள், 16 கழிப்பறைகள் மற்றும் மின் தூக்கி வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதேபோல, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ரூ.30 லட்சம் செலவில் இந்த கட்டிடத்தில் கழிப்பறை மற்றும் சமையலறை கட்டுவதற்கு நிதியுதவி செய்துள்ளார்கள். க்யூமேன் மில்க் வங்கி அமைவதற்கும் ரூ.30 லட்சம் சி.எஸ்.ஆர்.பங்களிப்பை தந்துள்ளார்கள். மேலும், 2022-23-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள் ரூ.5 கோடியில் சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் அமைப்பது தொடர்பாக விரைவில் அரசாணை வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்