விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முட்டை நுகர்வு 20 சதவீதம் சரிவு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் 20 சதவீதம் வரை முட்டை நுகர்வு சரிவடைந்து இருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் 20 சதவீதம் வரை முட்டை நுகர்வு சரிவடைந்து இருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
முட்டை விலை
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேல் முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தினசரி 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக சத்துணவு திட்டத்துக்கும் மற்றும் தமிழகத்தில் உள்ளூர் தேவைக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. குறைந்த அளவில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முட்டை கொள்முதல் விலையை பண்டிகை காலம் மற்றும் தட்பவெப்ப நிலையை பொறுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்கிறது. அதன்படி கடந்த 1-ந் தேதி 400 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை படிப்படியாக 14-ந் தேதி 450 காசுகளாக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த முட்டை கொள்முதல் விலை தற்போது 430 காசுகளாக இருந்து வருகிறது.
20 சதவீதம் நுகர்வு சரிவு
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
பொதுவாக விநாயகர் சதுர்த்தி காலத்தில் முட்டை நுகர்வு சரிவது வழக்கம். அதன்படி வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட இருப்பதால், அனைத்து மண்டலங்களிலும் முட்டை நுகர்வு சரிவடைந்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் 20 சதவீதம் வரை முட்டை நுகர்வு குறைந்துள்ளது. அதனால் வேறு வழியின்றி, முட்டை கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். சதுர்த்தி முடிந்ததும் ஒரு வாரத்தில் முட்டை நுகர்வு அதிகரிக்கும். அந்த நேரத்தில் கொள்முதல் விலை உயர்வதுடன் விற்பனையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.