பரமக்குடியில் மாவட்ட கல்வி அலுவலகம் மூடல்
பரமக்குடியில் மாவட்ட கல்வி அலுவலகம் மூடப்பட்டதால் சம்பளம்பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடியில் மாவட்ட கல்வி அலுவலகம் மூடப்பட்டதால் சம்பளம்பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
நிர்வாக சீரமைப்பு
பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலகம் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் இயங்கி வந்தது. இந்தநிலையில் அரசு ஆணை 151-ன் படி நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் அங்கு இயங்கி வந்த பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலகம் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் மூடப்பட்டது.
இதனால் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கி வந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் இணக்கப்படவில்லை. இதனால் பரமக்குடி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 19 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.
தவிப்பு
தற்போது நவம்பர் மாதம் முடிவுபெறும் நிலையில் உள்ளதால் இந்த மாதமும் அவர்களுக்கு சம்பளம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் இன்றி தவிக்கின்றனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் சரியான காரணங்களை கூறாமல் ஆசிரியர்களையும், அலுவலர்களையும் அலைக்கழிக்கின்றனராம். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே தமிழக அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி உடனடியாக சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலகத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் மற்றும் பென்ஷன் பலன்களும் வழங்கப்படாமல் உள்ளது.
குளறுபடி
இது குறித்து தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் சங்க மாநில இணை செயலாளர் நூருல் அமீன் கூறியதாவது:- பரமக்குடியில் இயங்கி வந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை மாற்றியதால் தான் இந்த குளறுபடி ஏற்பட்டு உள்ளது. அலுவலகத்தை மாற்றினாலும் அதற்கான அதிகாரி இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. அதனால் தான் ஆசிரியர் களுக்கும் அலுவலர்களுக்கும் சம்பளம் கிடைக்க வில்லை.
மாவட்ட கல்வி அலுவலகம் அந்தந்த பகுதிகளில் இருந்தால் தான் பள்ளிகளுக்கு ஏதுவாக இருக்கும். அதை மாற்றி இருக்கக்கூடாது. அரசு உடனடியாக இதில் தலையிட்டு 2 மாதமாக சம்பளம் இல்லாமல் தவிக்கும் ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.