அதிமுகவை கைப்பற்றும் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் நிறைவேறாது - ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

அதிமுகவை கைப்பற்றும் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் நிறைவேறாது என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறினார்.

Update: 2022-07-11 16:28 GMT

கோவை,

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், திட்டமிட்டபடி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க. இரட்டை தலைமை பதவியை ரத்து செய்தும், , இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக விவகாரம் குறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கோயிலாக கருதிய அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர்கள் குடிகாரர்களோடு கும்மாளம் போட்டத்தை மக்கள் அறிவார்கள். எந்த அடியாட்களையும் நாங்கள் அழைத்துவரவில்லை.

முன் கூட்டியே திட்டமிட்டு எடப்பாடி ஆதரவாளர்கள் ஆட்களையும், ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தனர். காலில் வெறும் பேண்டேஜ் போட்டுக்கொண்டு இ.பி.எஸ். ஆதரவாளர்கள் நாடகம் ஆடுகின்றனர். அதிமுகவை கைப்பற்றும் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் நிறைவேறாது. அம்மையார் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் ஓ.பன்னீர் செல்வம்.

இன்றைய பொதுக்குழுவில் 700 பேர் மட்டுமே பங்கேற்றனர். மனசாட்சி உள்ள அதிமுக உறுப்பினர்கள் பொதுக்குழுவுக்கு செல்லவில்லை. கோடநாடு, கொலை கொள்ளை வழக்கில் யார் குற்றவாளி என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்