எடப்பாடி பழனிசாமியால் தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி கடன் -தி.மு.க. குற்றச்சாட்டு
10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி மேலாண்மையைச் சரியாக கையாளாமல் 5.7 லட்சம் கோடி ரூபாய் கடனில் எடப்பாடி பழனிசாமி நிறுத்திச்சென்றார் என்று தி.மு.க. குற்றச்சாட்டியுள்ளது.
சென்னை,
தி.மு.க. ஆட்சிக் காலங்களில், தமிழக வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நிறைவேற்றியுள்ள திட்டங்களை எல்லாம் மறைத்துவிட்டு, தான் செய்ததாக கூறிவரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்கனவே ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கி எறிந்து விட்டார்கள்.
இதை புரிந்து கொள்ளாமல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை குறை கூறினால், மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டைகளை அவிழ்த்து கொட்டியிருக்கிறார்.
10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி மேலாண்மையை சரியாக கையாளாமல் 5.7 லட்சம் கோடி ரூபாய் கடனில் எடப்பாடி பழனிசாமி நிறுத்தி சென்றார். எடப்பாடி பழனிசாமி அரசின் குறைகளை, சரி செய்வதையே தற்போதைய சவாலாக தி.மு.க. அரசு மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருப்பது நகைச்சுவையாக உள்ளது.
யார் என்பது தெரியும்?
தி.மு.க. 2021 தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறை கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தை சென்று பார்த்தால் புரியும். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பஸ் நிலையத்தை திறந்து வைத்து, தன்னுடைய பெயரை பொறித்து கொண்டது யார் என்பது தெரியும்.
அவருடைய (எடப்பாடி பழனிசாமி) பேட்டியையும் - அவருடைய அறிக்கையையும் படித்து பார்த்தால், அவர் யார் என்பதையும், அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அவிழ்த்துக் கொட்டிய பொய் மூட்டையை பற்றியும் தெரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.