சென்னை தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னையில் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Update: 2023-08-11 13:38 GMT

ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம்

சென்னை சூளைமேட்டில் ஓசானிக் என்ற பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. பழம், காய்கறி மற்றும் கடல் உணவு வகைகளை இந்த நிறுவனம் ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு இந்த நிறுவனம் தனது தொழில் விரிவாக்கத்துக்காக பல்வேறு வங்கிகளில் ரூ.225 கோடி கடனாக பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிரடி சோதனை

இந்த நிலையில் அந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்து வெளிநாடுகளிலும் முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதையொட்டி அமலாக்கத்துறையினரும் இந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 13-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

சென்னை சூளைமேட்டில் உள்ள தலைமை அலுவலகம், மேற்கு தாம்பரம், தியாகராயநகர், பெருங்குடி, கோடம்பாக்கம், வேளச்சேரி, அமைந்தகரை, பள்ளிக்கரணை போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை முடிந்த பின்னர், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்