இருளில் மூழ்கி கிடக்கும் குடியிருப்புகள்

துறையூரில் இருளில் மூழ்கி கிடக்கும் குடியிருப்புகளில் ஒளிவீச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Update: 2023-02-14 20:02 GMT

துறையூரில் இருளில் மூழ்கி கிடக்கும் குடியிருப்புகளில் ஒளிவீச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

23, 24-வது வார்டுகள்

துறையூர் நகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட மலையப்பன் சாலை, 13 குறுக்குத் தெருக்கள், 24-வது வார்டுக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளான பொதிகை நகர், எழில் நகர், செல்வம் நகர், புறவழிச்சாலை இணைக்கும் பகுதி, பெரம்பலூர் புறவழிச் சாலைப் பகுதி, ரெங்கண்ணன் நகர், மின் அவன்யூ, ஜெயம் அவென்யூ, நேரு நகர், சுந்தராபுரம், வி.ஐ.பி. நகர், அருணாஅவன்யூ, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

விரிவாக்க பகுதியான தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் வேலைக்கு செல்லுபவர்கள் இரவில் வீடு திரும்பும்போது, அச்சத்துடனே வரவேண்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் நிலை மோசமாக உள்ளது.

அதுமட்டுமின்றி இப்பகுதிகளில் கொடிய விஷத்தன்மைக் கொண்ட பாம்புகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் அதனை மிதித்து, உயிரிழக்கும் நிலையும் உள்ளது. மேலும் இப்பகுதியில் இரவில் கஞ்சா விற்பனையும் அமோகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அச்சம்

மது அருந்தும் ஆசாமிகள் போதையில் காலி மதுபாட்டில்களை நடுரோட்டிலேயே உடைத்துப் போடுவதால், நடைப்பயிற்சி மேற்கொள்வோர் முதல் அப்பகுதியைக் கடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்களின் கால்களை உடைந்த கண்ணாடித் துண்டுகள் பதம் பார்க்கின்றன. இரவு 10 மணிக்கு மேல் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு மது அருந்தும் ஆசாமிகள், குடிபோதையில் அருவருக்கத் தகாத வார்த்தைகளை பேசுவதால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

நடவடிக்கை

கடந்த 2006-ம் வருடம் முதலே ஒரு இணைப்புக்கு சுமார் ரூ.6 ஆயிரம் வரை காவிரி குடிநீர் இணைப்புக்காக நகராட்சி நிர்வாகத்திற்கு கட்டணம் செலுத்தியும் இதுநாள் வரை நகராட்சி நிர்வாகம் காவிரி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

23-வது வார்டில் 13-வது குறுக்குத் தெருவில் கடைசியில் புறவழிச் சாலையை இணைக்கும் பகுதியான கண்ணபிரான் காலனி சாலை வழியாக செல்லும் பிரதான சாலையில் சமூகவிரோத செயல்கள் அதிக அளவில் நடக்கிறது.

எனவே இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்