பார்க் ரோட்டில் பாய்ந்தோடிய கழிவு நீர்
திருப்பூர் பார்க் ரோட்டில் நேற்று கழிவு நீர் பாய்ந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் கழிவு நீரில் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.
திருப்பூர் பார்க் ரோட்டில் நேற்று கழிவு நீர் பாய்ந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் கழிவு நீரில் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.
ரோட்டில் பாய்ந்த கழிவு நீர்
திருப்பூர் குமரன் ரோடு வளர்மதி பாலத்தில் இருந்து பார்க் ரோடு செல்லும் வழியில் ரோட்டோரத்தில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து சற்று தொலைவில் இந்த கழிவு நீர் கால்வாயில் கசிவு உள்ளது. இதனால் ரோட்டில் கழிவு நீர் அடிக்கடி தேங்கி நிற்பது வழக்கம். இந்த பிரச்சினை நீண்ட நாட்களாக இல்லாத நிலையில் தற்போது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. நேற்று காலை பார்க் ரோடு முழுவதும் குளம் போல கழிவு நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கழிவு நீரில் வாகனங்களை ஓட்டி செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். துர்நாற்றத்துடன் பாய்ந்து கொண்டிருந்த கழிவு நீரால் இவ்வழியாக சென்ற பாதசாரிகளும் மிகவும் சிரமப்பட்டனர்.
நிரந்தர தீர்வு வருமா?
குறிப்பாக கார், ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் பீய்ச்சி அடித்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், அருகில் உள்ள நடைபாதையில் சென்றவர்களும் கழிவு நீர் அபிஷேகத்திற்குள்ளாகினர். மாநகரின் வாகனப்போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த ரோடு இருப்பதால் இவ்வழியாக எப்போதும் வாகனங்கள் சர,சரவென சென்றவண்ணம் இருக்கும். எனவே இங்கு அடிக்கடி கழிவு நீர் பிரச்சினை ஏற்படாதவண்ணம். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.