கண்டோபா சுவாமி மல்லேஸ்வரர் கோவிலில் தசரா விழா

மராட்டிய மன்னர் சிவாஜி வழிபட்ட கண்டோபா சுவாமி மல்லேஸ்வரர் கோவிலில் தசரா விழா நடைபெற்றது.

Update: 2022-10-06 18:16 GMT

மராட்டிய மன்னர் சிவாஜி வழிபட்ட கண்டோபா சுவாமி மல்லேஸ்வரர் கோவிலில் தசரா விழா நடைபெற்றது.

சிவாஜி வழிபட்ட கோவில்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பழைய தேரடி அருகில் மராட்டிய மன்னர் சிவாஜி வழிபட்டு சென்ற கண்டோபா சுவாமி மல்லேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு அபூர்வமான கோவில் ஆகும். இந்த கோவில் திருவிழாவும் ஒரு வினோதமாகவே நடைபெறும்.

இந்த கோவிலில் நாம தேவ மராட்டா என்னும் ரங்காரி என்றும் பாவ சார சத்திரியர் என்றும் அழைக்கப்படுகின்ற இனத்தவர்கள் அதிக அளவில் வழிபடுகின்றனர். கருவறையில் கண்டோபா குதிரையின் மேல் அம்பாள்பவனியுடன் காட்சியளிக்க மல்லசூரன் என்ற அசுரன் நாய் உருவில் அவரை வழிபடும் பஞ்சலோக சிலையை தரிசிக்கலாம்.

உத்திர தாண்டவம்

தசரா பண்டிகை திருவீதி உலாவின் போது அசுரன் மல்லசூரன் வழி வந்தவர்கள் கருப்பு கம்பளி ஆடை அணிந்து, கரடி முடியினால் ஆன தலைமுடி அணிந்து கையில் உடுக்கைகளுடன் கண்டோபா சாமியின் புகழினை பாடிக்கொண்டு, இடையிடையே நாய் போல குறைத்துக் கொண்டு உக்கிர தாண்டவம் ஆடும் நிகழ்ச்சியினை இந்த கண்டோபா சுவாமி கோவில் தசரா பண்டிகையின் பத்து நாள் திருவிழாவாக பார்க்கலாம்.

தசரா பண்டிகையின் இரண்டாவது நாளில் கோவில் கர்ப்ப கிரகத்தில் மணல் பரப்பி நவதானியங்களை விதைத்து இதன் நடுவே கலசம் வைத்து பூஜை செய்கின்றனர். தானியப்பயிர் செழிப்பாக வளர்ந்தால் இந்த வருடம் முழுவதும் இந்த பகுதி சூட்சமம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

அதிரடி ஆட்டம்

விஜயதசமி அன்று வழிபடும் பக்தர்கள் கர்ப்ப கிரகத்தில் உள்ள கண்டோபா சாமியினை வாலாஜாவின் பிரதான தெருகளில் எடுத்துச் சென்று திருவீதி உலா நடந்துகின்றனர். இந்த கோவிலில் அம்பாள் பவானியுடன், கண்டோபா சாமி குதிரை மீது பவனி வருவது போன்ற சிலையும், தன்னுடன் பைரவர்களை அழைத்து வருவது போன்ற சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. புல்லாங்குழலை தொடர்ந்து மூச்சு விடாமல் தம் பிடித்து ஊதிய நிலையில் ஆடுவார்கள்.

கையில் உருட்டு கட்டை வைத்துக் கொண்டு வேகமாக தொடர்ந்து சுழன்று சத்தம் எழுப்புவார்கள். இவர்களின் வித்தியாசமான அதிரடி ஆட்டம், நடனம் பார்ப்போரை பயமுறுத்துவதாகவே உள்ளது. முடிவில் பக்தர்களுக்கு மஞ்சள் பிரசாதம் வழங்கி ஆசி தருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்