திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்: காடேஸ்வரா சுப்ரமணியம்

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-19 18:45 GMT

நாசரேத்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவிற்கு வரும் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களை உள்பிரகாரத்தில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று காடேஸ்வரா சுப்ரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நாசரேத் வாழையடி பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பக்தர்கள் தங்க..

திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் உள்பிரகாரத்தில் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். தங்கத் தேர் மீண்டும் சுற்றிவர வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள சண்முகர் அர்ச்சனை, பஞ்சலிங்கம் அர்ச்சனை, வருடந்தோறும் நடை பெறுகின்ற லட்சார்ச்சனை, சந்தனம், இலை விபூதி வழங்குதல் ஆகியவற்றை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும், .கோவில் பிரகாரத்தில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வெளியே கடைகள் அமைக்க வேண்டும்.

கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு உரிய நிதியை தமிழக அரசு வழங்கிட வேண்டும் ஆகியகோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (இன்று) மாலை 5 மணிக்கு திருச்செந்தூரில் மாபெரும்ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கமிஷனில் தற்போது தவறு நடந்து இருக்க கூடுமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்

எனவே விசாரணை நடத்துவதை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்க வேண்டும். இந்தி திணிப்பை கைவிடுவது குறித்து சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் அரசியல்உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசு விருப்பம் இருந்தால் இந்தி படிக்கலாம் என்று தான் தெரிவித்துள்ளது. கட்டாயமாக திணிக்கவில்லை. ஆனால் இந்துக்கள் மனதை புண்படுத்தி பேசிய ஆ. ராசா பேச்சை மறைப்பதற்காக இந்தியை தி.மு.க. கையில் எடுத்துள்ளது கண்டிக்கத் தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசுராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் வெட்டும்பெருமாள், மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்