ரூ.4,000 கோடியில் பணிகள் நடந்ததால்தான் பாதிப்புகள் குறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னையில் உள்ள நிவாரண முகாம்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-05 04:53 GMT

சென்னை,

சென்னையில் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். முதலில் சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பின் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் மக்களுக்கு உணவு வழங்கினார். அதனை தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது:

"முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் இயல்பு நிலையை வெகு விரைவில் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மழையால் ஏற்பட்ட பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது.

2015-ல் சென்னையில் செயற்கை வெள்ளம் ஏற்பட்டது. தற்போது இயற்கையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 2015 மழையின்போது 119 பேர் பலியான நிலையில், இம்முறை அதிகம் மழை பெய்தும் 7 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். 47 ஆண்டுகளில் இல்லாத அளவாக இம்முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோடி ரூபாயை திட்டமிட்டு செலவு செய்ததன் காரணமாகவே தற்போது சென்னை தப்பியுள்ளது.

ரூ.4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் பணிகள் நடந்ததால் தான் பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன. மழை நிற்பதற்கு முன்பே வெளி மாவட்ட பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடங்கின.

'மிக்ஜம்' புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம். மத்திய அரசு வழங்கும் நிதியை பொறுத்து மழை நிவாரண உதவிகள் வழங்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்