மழைக்கு சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர் மாநகரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் பல ரோடுகள் சேதமடைந்து மோசமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2023-10-18 12:43 GMT

திருப்பூர்

திருப்பூர் மாநகரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் பல ரோடுகள் சேதமடைந்து மோசமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குண்டும், குழியுமான சாலை

திருப்பூர் மாநகரில் பல ரோடுகள் சரியான பராமரிப்பின்றி காணப்பட்டன. இந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் இந்த ரோடுகளில் ஆங்காங்கே பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலேஜ் ரோட்டில் மரக்கடை பகுதியில் இருந்து சிக்கண்ணா கல்லூரி வரைக்கும் ஏராளமான குழிகள் காணப்படுகின்றன. இதேபோல் ராயபுரம் ரோடும் மோசமான நிலையில் உள்ளது.

குறிப்பாக திருவள்ளுவர் நகர் முதல் வீதி அருகே ரோட்டில் மிகப்பெரிய குழி உள்ளது. இதேபோன்று மாநகரில் பல இடங்களில் ரோடுகள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இதில் யுனிவர்சல் தியேட்டர் ரோடு உள்பட ஒரு சில இடங்களில் மண், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள் அவதி

ஆனால், காலேஜ் ரோடு, ராயபுரம் ரோடு மற்றும் சில ரோடுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குண்டு, குழிகளில் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் குழி இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் விபத்திற்குள்ளாகின்றனர்.

இவ்வாறு வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுவது ஒருபுறமிருக்க, ரோட்டின் சேதமும் அதிகமாகி வருகிறது. குறிப்பாக காலேஜ் ரோட்டில் எப்போதும் அதிக அளவிலான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால் இங்குள்ள குழிகள் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. எனவே மாநகரில் மோசமான நிலையில் உள்ள ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்